“ஒப்புக்கொள்ளவே மாட்டேன்... சட்டப்படி எதிர்கொள்வேன்” - மாதம்பட்டி ரங்கராஜ்
எனது பெயரில் நடந்து வரும் சர்ச்சை குறித்து ஆன்லைன் ஊடகங்கள் எந்த கருத்துக்களையும், அனுமானங்களையும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம்... நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையை தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையை தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். இந்த பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்துவரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ளமாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி எனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.