×

“உலகத் தரத்திலான மருத்துவக் கட்டமைப்பு” - அமைச்சர் மா.சு.

 

சென்னை கிண்டியில் 6.5 ஏக்கர் பரப்பளவில், ரூ.417 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள  குழந்தைகள் உயர் பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்காக நடைபெற்று வரும் பணியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து, செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர், தமிழக மருத்துவ கட்டமைப்பை உலகளாவிய அளவில் கட்டமைத்து வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் உள்ளது. உலகின் முதன்முறையாக குழந்தைகளுக்கான உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்சி மையம் துவங்கப்படும் என அறிவித்தார். நாளை மறுதினம் 27 ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். 6 தளங்கள் கொண்ட மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டப்படவுள்ளது. 4,63,543 சதுர அடியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. குழந்தைகளுக்கான ரத்தவியல் பிரிவு, சிறுநீரக பிரிவு, ஆராய்ச்சி மையம், உடலுறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு, நுரையீரல் சிகிச்சை, இதய சிகிச்சை உள்ளிட்ட பல நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவுகளுடன் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை நல்லமுறையில் செயல்பட்டு வந்தாலும், இன்னும் சிறப்பாக ஆராய்ச்சி மையத்தோடு இந்த மருத்துவமனை அமையவுள்ளது. 18 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என  பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 வயது பெண்களுக்கு முன்கூட்டியே கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே இது முதன்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 14 வயது கொண்ட 3,38,649 இளம்பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு தடுப்பூசி 14 ஆயிரம் என இரண்டு தடுப்பூசிகள் போடுவதற்கு ரூ.28 ஆயிரம் ரூபாய் வரை செல்வாகிறது. தமிழக அரசு இதனை இலவசமாக இளம்பெண்களுக்கு வழங்குகிறது. இளம்பெண்கள் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் மருந்தான  HBV தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான நிகழ்வு 27 ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பெருமளவில் கடுப்படுத்தப்பட்டுள்ளது. திமுக., அரசு பொறுபேற்றுக்கொண்ட பிறகு ஒற்றை இலக்கத்தில் தான் இந்நோய்களின் எண்ணிக்கை உள்ளது. முன்பு இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு, அரசு மருத்துவமனைகளில் பதிவாகும் எண்ணிக்கைகளை தான் வெளியிட்டு வந்தது. ஆனால் எங்களது தலைவர் பொறுப்பேற்ற பிறகு, அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் எண்ணிக்கையும் வெளியிடப்படுகிறது. எங்கள் தலைவர் பொறுப்பேற்ற பிறகு டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகிறது. பெருமளவில் அந்நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.