×

"தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு?" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது இதுதான்!

 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம் பெற்றுள்ளது. ஒரே வாரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது தினசரி கொரோனா பாதிப்பு. சென்னையில் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது எண்ணிக்கை. இதனால் மாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தொற்று குறையும் வரை இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும். அதேபோல நிலைமை கைமீறி சென்றால் வெள்ளி முதல் ஞாயிறு வரையில் கூட முழு ஊரடங்கு அமலாகல்லாம். இந்த வகை ஊரடங்கை பொறுத்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும்.

பெட்டிக்கடைகள் கூட திறந்திருக்கக் கூடாது என்பது தான் அரசின் ஆணை. காய்கறி மற்றும் இறைச்சிச் கடைகள், ஜவுளிக்கடைகள், தியேட்டர்கள் என எதுவும் திறக்கப்படவில்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகிறது. இதனைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். இச்சூழலில் சென்னையில் முக்கிய பகுதிகளில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் மூலம் அவற்றை படிப்படியாக குறைக்க முடியும். ஊரடங்கின் பலன் இப்போது தெரியாது. மெது மெதுவாக தான் தெரியவரும். மேலும் மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது கட்டாயம். ஒமைக்ரான் கொரோனாவும் பரவி வருவதால் மக்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஞாயிறு முழு ஊரடங்கு தற்போதைய சூழலில் மிகவும் அவசியம். இதனை அரசு நன்கு உணர்ந்துள்ளது.

பிப்ரவரி மாதம் வரை கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய நிலை அதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என கேட்கிறீர்கள். முழு ஊரடங்கு வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அரசின் கருத்தும் அதுவே. மக்களுக்கு பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்பு வராத வகையிலே முதல்வரின் நடவடிக்கை இருக்கும்” என்றார்.