×

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர் : தீவிர விசாரணை!

 

 சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு  முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்கு முக்கிய அமைச்சர்களின் வீடுகள் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாகா கடந்த மாதம் 22ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். எம்ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோடிக்கணக்கான ரூபாயை ஊழல் செய்ததாகவும் ,ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடு செய்வதாகவும் புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எம்ஆர் விஜயபாஸ்கர் பக்கம் திரும்பினர். 

அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையின் முடிவில் ரூபாய் 25 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி  லஞ்ச ஒழிப்பு துறையினர் நேரில் ஆஜராகுமாறு எம்ஆர் விஜயபாஸ்கர் சம்மன் அனுப்பினர்.  ஆனால் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என விஜயபாஸ்கர் தரப்பில் விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து விஜயபாஸ்கருக்கு மீண்டும் அக்டோபர் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.  எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை  நடத்தி வருகின்றனர்.இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.