'கண்முன்னே ஆற்றில் மூழ்கிய சொகுசுக் கப்பல்!' – 129 பேரும் தப்பிய அதிசயம்!
'அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான 295 அடி நீளமுள்ள 'அமெரிக்கன் ஹெரிடேஜ்' (American Heritage) என்ற சொகுசுப் பயணிகள் கப்பல், நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கப்பல் துறைமுகத்திற்கு வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் பயணிகள் கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, 'அட்லாண்டிக் அஸ்பால்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான டேங்கர் கப்பல் ஒன்று, அந்தச் சொகுசுக் கப்பல் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்து குறித்துப் பேசிய நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ, "பயணிகள் கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போதே கப்பல் ஆற்றில் மூழ்கத் தொடங்கி, பின்னர் ஒருபக்கமாகச் சாய்ந்து முழுமையாகக் கவிழ்ந்தது" என்று தெரிவித்தார். விபத்து நடந்த நேரத்தில் அந்தக் கப்பலில் 129 பேர் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கப்பல் கவிழ்வதற்கு முன்பாகவே மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டுப் பயணிகளை வெளியேற்றினர்; கப்பல் நீரில் மூழ்கிய பிறகும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், யாருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நியூ ஆர்லியன்ஸ் தீயணைப்புத் துறை, அவசர மருத்துவப் பிரிவு, காவல்துறை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 129 பேரும் உயிர் தப்பிய இந்தச் சம்பவத்தை "மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்" (Miracle on the Mississippi) என மேயர் ஹெலினா மொரேனோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் துறைசார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றின் நடுவே நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.