“கள் இறக்க அனுமதிக்கலாம்”- அரசுக்கு பரிந்துரை
கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம். டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50 சதவீதம் குறைக்கலாம் என கோகுல்தாஸ் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய கொ.ம.தே.க கட்சி எம்.எல்.ஏ நித்தியானந்தம், “தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தென்னையில் இருந்து எடுக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட நீரா பானத்தை சந்தைப்படுத்த வேண்டும். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் சத்துணவில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பதை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். கொப்பரையை கொள்முதல் செய்வதைவிட கேரள மாநில அரசை போன்று தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்” என பல்வேறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், “அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம். கள் இறக்க, விற்க உரிமம் தருவது, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம். டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50% குறைக்கலாம்; விலை குறைப்புக்காக மது வகைகளை டெட்ரா பேக்கில் அடைத்து விற்க பரிசீலிக்கலாம். காலை 9 முதல் மதியம் 1, மாலை 5 முதல் இரவு 9 வரை என டாஸ்மாக் வணிக நேரத்தை மாற்றலாம். ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கலாம்” என யோசனை வழங்கியுள்ளது.