×

சென்னையில் எல்பிஜி தட்டுப்பாடு- நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் 

 

சென்னையில் எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கேஸ் நிரப்பி செல்கின்றனர். 

ஈரானுடனான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் கடந்த மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல், சமையலுக்கான கேஸ், ஆட்டோ எல்.பி.ஜி தட்டுப்பாடு துவங்கியது. குறிப்பாக பல்வேறு தனியார் ஆட்டோ கேஸ் நிலையங்களில் கடந்த மாதம் முதல் முற்றிலுமாக கேஸ் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், எச்.பி., போன்றவைகளில் மட்டும் குறைந்த அளவு கேஸ் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கேசை நிரப்பி செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து கேசை நிரப்பி செல்லும் பரிதாப நிலைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல் எல்பிஜி தட்டுப்பாட்டால் சென்னையில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கனவே கேஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது, பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் எல்.பி.ஜி., கேஸ் கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாக வேதனை தெரிவித்தனர். மேலும் தேர்தலுக்கு முன்பு கூட கேஸ் கிடைத்தது என்றும் தேர்தல் முடிந்ததுமே கேஸ் கிடைக்கவில்லை என்றும் புலம்புகின்றனர். மேலும் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்றவர்களின் நலனை பேசும் அரசியல் கட்சிகள் ஆட்டோ ஓட்டுநர்களை கண்டு கொள்ளவில்லை என்கின்றனர். போருக்கு முன்னால் 50 ரூபாய்க்கு கிடைத்த கேஸ் தற்பொழுது விலை அதிகரித்து 87, 100 என ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையில் விற்கப்படுகிறது என்றனர்.