×

"வங்கக் கடலில் அக்.21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்" 

 

வங்கக் கடலில் அக்.21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா, “ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் 21 தேதி காலைக்குள் கரைக்கு திரும்ப வர வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வாய்ப்பு உள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், அதேபோல் அரபிக் கடல் பகுதியில் கேரள கர்நாடகா பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். 

அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும்  21 தேதியில் இருந்து அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாக கூடும். வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கு அதீத கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இடி, மின்னுடன் கூடிய மழைமேகம் உருவாக வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். இடி மின்னல் உள்ளிட்ட சத்தங்கள் கேட்கும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை அன்று சென்னைக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி தினத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.