×

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை

 

கள்ளக்குறிச்சி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், ஆற்றில் சடலமாக சிறுமியும் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது 17 வயது மகளைக் காணவில்லை, என மகளின் அண்ணா விஜயகுமார் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 21 ஆம் தேதியன்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் 17-வயது சிறுமி சடலமாக மிதப்பதாகவும், அதற்கு அருகாமையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயது சிறுவன் இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கள்ளக்குறிச்சி போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுமியின் சடலத்தையும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சிறுவனின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.