×

3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்த தமிழக அரசு- லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்  

 

லாரிகளுக்கான உயர்த்தப்பட்ட  எப் சி (FC)கட்டணத்தை மூன்று மாதம் நிறுத்தி வைத்ததால் , லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ்  தெரிவித்துள்ளார்.

லாரிகளுக்கான தகுதி சான்று கட்டணம் பல மடங்கு  உயர்த்தப்பட்டதால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவது வரும் 25 ஆம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்   ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  கடந்த 17 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு, தகுதிச் சான்று புதுப்பிப்பதற்கான கட்டண உயர்வை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி  வைப்பதாகவும்,  பழைய கட்டணத்தை செலுத்தி தகுதி சான்று பெறலாம் எனவும்  அறிவித்ததை அடுத்து, லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தனராஜ் தெரிவித்துள்ளார். மூன்று மாதத்திற்கு பழைய கட்டணமே கட்டலாம் என அறிவித்த தமிழக  முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இதே நிலை நீடித்தால் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு உடனடியாக கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.