×

வந்தவாசி அருகே லாரி உரசி அதிக மின்னழுத்தம்: வீடுகளில் வெடித்து சிதறிய மின்சாதனப் பொருட்கள்!

 

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லாரி ஒன்று சென்றபோது, சாலையோரம் சென்ற மின்சார ஓயர் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் மின்சார விநியோகத்தில் திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்கள் பழுதடைந்து எரிந்து நாசமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பதறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பலமுறை மின்வாரியத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மின்சார ஓயர் சேதமடைந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்சார விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த மின்சாதனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.