☰
×

குமரி மாவட்டத்திற்கு டிச.3 அன்று உள்ளூர் விடுமுறை

 

புனித சவேரியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.   திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகிய அலங்காரத் தேர் பவனி டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான டிசம்பர் 3-ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

 விழாவின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு புனித சவேரியாரை வழிபடுகின்றனர். பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் உப்பு, மிளகு போன்ற காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.  கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் புனித சவேரியாருக்காக உலகில் கட்டப்பட்ட முதல் தேவாலயமாகக் கருதப்படுகிறது.