என் நெஞ்சில் குடியிருக்கும்...சுந்திர தின விழாவில் பேசிய முதல்வர் விஜய்..!
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்ற வருகை தந்தார். முதலமைச்சர் விஜயின் பெற்றோர், நடிகை திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தேசிய கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள். தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம். உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். அடிமையாக இருக்கிறோம் என்பது புரிந்தாலே ஒற்றுமை வந்துவிடும். முன்னேறும் போது, லஞ்சம், ஊழல் போன்றவற்றிலிருந்து காப்பதும் விடுதலைக்கு சமமானது என்று முதல்வர் விஜய் உரையாற்றினார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என தொடங்கி சுதந்திர தின விழாவில் பேருரையாற்றிய முதலமைச்சர் விஜய். “நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும். அனைவரும் ஒன்றாக யோசித்து ஒன்றாக சேருவார்கள். அவ்வாறு ஒன்று சேரும் இடத்தில்தான் சாதி ஒழியும், மதம் ஒழியும், மொழி இனம் ஆகிய அனைத்தும் உடைந்து நொறுங்கும். இதுதான் உண்மையான சுதந்திரம்.
தமிழ்நாட்டை லஞ்சம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான். 80வது சுதந்திர தின நாளில் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இன்று இந்த விழாவில் என்னை பேச வைத்திருக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பொதுவாழ்வில் சமரசம் இருக்கக்கூடாது. மக்கள் பணிதான் முக்கியமானது. அதை நோக்கி தான் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, மத்திய அரசின் நிர்வாகரீதியான ஒத்துழைப்போடு செயல்படுத்த இருக்கிறோம்.
தமிழ்நாடு, கொள்கைகள் என்று வந்துவிட்டால் மாநிலங்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை தமிழக வெற்றிக் கழக அரசு எப்போதும் எதிர்க்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
இதற்கு முன்னால் கொண்டு வந்த அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரியார் பிறந்த நாளன்று ‘காலை உணவு திட்டம்’ விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
அனைவரும் ஓட்டு போட்டு, உங்கள் அண்ணனை, தம்பியை, பிள்ளையை, ஜெயிக்க வைத்து முதலமைச்சராக விட்டீர்கள். அதனால் நம் கடமை எல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய் விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் கூடவே இருக்க வேண்டும். உறுதியாக அரசுடன் கூடவே இருக்க வேண்டும். வாருங்கள் நாம் அனைவரும் கடமையை சேர்ந்து செய்வோம்” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
"என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே.." - முதலமைச்சர் விஜய் சொன்ன சுதந்திர தின வாழ்த்துகள்#Chennai | #CMVijay | #TVK | #IndependenceDay | #IndependenceDay2026 | #PolimerNews pic.twitter.com/Uzcp7ZQZah
— Polimer News (@polimernews) August 15, 2026