×

சிங்கப்பெண் அதிரடி படை அதிரடி..! மெரினாவில் காணாமல் போன பெண் குழந்தை மீட்பு..!

 

ஆந்திராவை சேர்ந்த பாலபத்ராஜ் (வயது 28) தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கடற்கரையில் இரவு நேரத்தில் குடும்பத்துடன் கொஞ்ச நேரம் உறங்கி உள்ளார். உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது இரண்டு வயது குழந்தை காணாமல் போனது அறிந்து பாலபத்ராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

மெரினா கடற்கரை மணற்பரப்பில் குழந்தையைச் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து எண் 100க்கு தொடர்பு கொண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மெரினா காவல் நிலைய போலீசார் மற்றும் மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் சரக சிங்கப்பெண் அதிரடி படையினருக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ப்ளூ பீச் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு கடற்கரை பகுதியில் சிங்கப்பெண் அதிரடிப்படை குழுவினர் தீவிரமாக குழந்தையை தேடி வந்தனர்.அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில் இரண்டு வயது குழந்தை தனியாக அழுத்துக் கொண்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த குழந்தையை சிங்கப்பெண் அதிரடிபடை போலீசார் மீட்டு சென்னை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மெரினா காவல் நிலைய ஆய்வாளர் பாலபத்ராஜை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் உப்பரபலம் விழிகொண்டல மண்டலம் பகுதியில் இருந்து சாய்பாபா படம் கொண்ட சிறிய வாகனம் மூலம் சென்னைக்கு வந்து காலை வேளையில் சென்னையில் உள்ள சாலைகளில் வாகனம் மூலம் சுற்றி பார்த்துவிட்டு பின்னர் இரவு மெரினா கடற்கரையில் தங்கி வருவதாக அவர் தெரிவித்தார். நேற்றிரவு மெரினா கடற்கரைக்கு தனது இரண்டு வயது குழந்தையுடன் வந்து உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை தொலைந்துவிட்டதாகவும் பாலபத்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு உரிய சட்ட நடவடிக்கை உடன் இரண்டு வயது குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் சிங்கப்பெண் அதிரடிபடை போலீசார்க்கு நன்றி தெரிவித்தனர்.