"குரங்குபோல் திமுகவுக்கு கொள்கை இல்லை, கோட்பாடும் இல்லை... பச்சோந்தியைவிட மோசமானவர்கள்"- எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது; கூட்டணியை பார்த்து பதறுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளர்கள் டி நகர் சத்யா, விருகை ரவி, ராஜேஷ் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறார்கள். இந்த 4 ஆண்டுகளில் என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தார்கள்? எதுவுமே இல்லை. சாதனை சாதனை என்று சொல்கிறார்.. சாதனைக்கு பெயர் பெற்றவர் நான் தான் என்று சட்டப்பேரவையில் முழங்குகிறார். உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆகியது தான் நீங்கள் செய்த சாதனை . 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு, வாரிசு ஆட்சிக்கு, மன்னராட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இந்த ஆட்சி எப்பொழுது அகற்றப்படும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் உங்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
பாஜகவோடு அதிமுக எப்படி கூட்டணி வைக்கலாம் என்று முதலமைச்சர் கேட்கிறார். அதுவும் சட்டப்பேரவையில் நேருக்கு நேர் கேட்கிறார். இது எங்களுடைய கட்சி. ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி. உங்களுக்கு ஏன் கோபம், பதற்றம், எரிச்சல் வருகிறது? பாஜகவோடு அதிமுக கூட்டணி வைக்காது என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருந்தார். இன்றைக்கு கூட்டணி வைத்ததும் பதறுகிறார். அந்தப் பதற்றத்தை நான் நேரடியாக சட்டப்பேரவையில் பார்த்தேன். ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணி வலிமையான வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேர இருக்கிறது. பாஜகவோட கூட்டணி வைக்கும் பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அதிமுக பாஜக கூட்டணியில் அதிமுக தான் தலைமை தாங்கும் என்று கூறினார்.
வெற்றி பெற்ற பிறகு அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்காது என்று ஸ்டாலின் எண்ணினார். அவர் எண்ணமெல்லாம் கானல்நீராகிவிட்டது. சில கட்சிகள் நாங்கள் வரலாற்று பிழை செய்து விட்டதாக சொல்கிறார்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலை சந்திப்போம். வாக்குகளை சிதறாமல் எதிரிகளை வீழ்த்த நாங்கள் வியூகம் எடுத்து உள்ளோம். நாங்கள் கூட்டணி வைப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களே... 1999 ஆம் ஆண்டு பாஜகவோடு திமுக கூட்டணி வைக்கவில்லையா? அப்பொழுது பாஜக நல்ல கட்சி. இப்பொழுது அதிமுகவோடு கூட்டணி வைத்தால் சரி இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். நீங்கள் ஆட்சிக்கு வர கொள்கை, கோட்பாடு இல்லாமல் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பீர்கள். குரங்கு எப்படி மரத்துக்கு மரம் தாவுமோ... அதுபோல தொடர்ந்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்வார்கள். பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறத்தை மாற்றிக் கொள்ளும். ஆனால், அடிக்கடி கூட்டணியை மாற்றும் கட்சி திமுக” என்றார்.