☰
×

அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்!

 

இயல், இசை, நாடக மன்ற பதவிக்கு ரூ.5 கோடி தர முன் வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கோரி ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது. 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்  கடந்த 1.11.2026 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு,  எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகவும், அவரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் தன்னிடம் அழைத்து வந்ததாகவும், தனது உரையில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான இ. பரந்தாமன் அவர்கள் 2.11.2026 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (23.11.2026) திரு. இ. பரந்தாமன் அவர்கள் மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.