‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’.. இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பழனிசாமி..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று ( 7.7.2025 ) தொடங்கி வரும் ஜூலை 23 தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி முதல்நாளான இன்று (7ம் தேதி) கோவை மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்களும் உடன் கலந்துகொள்கின்றனர். மேலும், கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடுவது, ‘ரோடு ஷோ’ மூலம் மக்களை சந்திப்பது மற்றும் உரையாடுவது என பல்வேறு திட்டமிடல்கள் உள்ளன. தொடர்ந்து மாலை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சந்திப்பு அருகிலும், தொடர்ந்து காரமடை சந்திப்பு, காந்தி சிலை அருகில் , நரசிம்மநாயக்கன் பாளையம், துடியலூர் ரவுண்டானா, சரவணம்பட்டி ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது மக்களுடன் அவர் உரையாற்ற இருக்கிறார்.
தொடர்ந்து நாளை 8ம் தேதி கோவை மாநகர், 10ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11ம் தேதி விழுப்புரம், 12ம் தேதி கடலூர், 14ம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி,15ம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16ம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18ம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர், 19ம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21ம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22ம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23ம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.