வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்...நிச்சயமாக நம்முடைய கட்சி மீண்டும் எழும் - இபிஎஸ்..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் தற்போதைய கட்சி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, களப்பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக ஏற்பட்ட பின்னடைவுகள், வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது? கட்சியின் களப்பணிகளை எப்படி மேலும் வலுப்படுத்துவது? கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பன பற்றியும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
மேலும் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் அதிமுக கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தி புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம் சுனாமி பேரலை விபத்து போல வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வருகிற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் நிச்சயமாக அதிமுகவே வெற்றி பெறும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். அதிமுகவில் இருந்து பலனடைந்து தற்போது கட்சி சரிந்திருக்கும் நேரத்தில் அதனை தாங்கி பிடிக்காமல் வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். நிச்சயமாக நம்முடைய கட்சி மீண்டும் எழுமென நிர்வாகிகளிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையைத் தொடர்ந்து இன்று மாலை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.