×

சாதி, மதம், அரசியல் கடந்து ‘ஓரணியில் தமிநாடு’ வெல்லட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 


சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை வெல்லட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

 திமுகவில்  புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியாக,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த ஜூலை 1ம் தேதி  அண்ணா அறிவாலயத்தில்  ‘ஓரணியின் தமிழ்நாடு’உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை தொடங்கி வைத்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய், நம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இந்தப் பரப்புரை மூலம், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்! இதன் மூலம்   45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள  ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொருநகரத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்  உள்ள  அனைத்து 2 கோடி  100% குடும்பங்களையும் சந்தித்து 1 கோடி குடும்பங்களையும்,  2 கோடி உறுப்பினர்களை திமுகவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள  68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக பதிவு செய்தல் வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது., 45 நாட்களுக்குப் பிறகு  ஆகஸ்ட் 15ம் தேதி  ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையின் நிறைவு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று  தமிழகம் முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.  சென்னை ஆழ்வார்பேட்டையில்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,  வீடு வீடாகச் சென்று திமுகவில் இணையுமாறு பரப்புரை மேற்கொண்டார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து  ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.