"நயினார் நாகேந்திரன் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை!" - கனிமொழியின் அதிரடிப் பதில்..!
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாட்டில் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வரக்கூடிய மகளிர் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் மதியத்திலேயே புறப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டு, இரவு முடிவதற்குள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் மாநாட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று பணித்துள்ளார்.
ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்ளும் திடலில், அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன. எந்தப் பகுதிகளில் இருந்து, எந்த ஊர்களிலிருந்து மகளிர் வர வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தெளிவாக அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வரக்கூடிய மகளிருக்காக தேவையான மருத்துவ வசதிகளும், மருத்துவ சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உணவு ஏற்பாடும், போதிய குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மகளிர் அனைவரும் பாதுகாப்பாக வந்து, பத்திரமாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டங்கள் நடத்தும் இயக்கம் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மக்களை சந்திக்கும் தலைவர்களும் அல்ல. முதல்-அமைச்சர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். தொடர்ந்து மக்களை சந்திக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே, தேர்தல் நேரங்களில் அனைத்து இயக்கங்களும் மாநாடுகளை நடத்துவது ஒரு வழக்கமான ஒன்றுதான். தேர்தல் சமயத்தில் மகளிர் மாநாடு, இளைஞரணி மாநாடு போன்றவற்றை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதே நேரத்தில், இதற்கு முன்பாகவும் தொடர்ச்சியாக மகளிரை சந்திக்கும் கூட்டங்களும், மகளிர் அணியினருடன் நடைபெறும் சந்திப்புகளும், இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்தியா கூட்டணி உடையும்” என்ற கேள்விக்கு, அவருடைய ஆரூடங்களுக்கும் ஆசைகளுக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அவர் கனவு காணட்டும்; தப்பு இல்லை, கனவு கண்டு கொண்டே இருக்கட்டும். நிச்சியமாக பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ளட்டும் என்ற கூறினார்.