நெஸ்லே நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை..!! பால் பவுடரில்...
'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின், 'நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1', 'லாக்டோஜென் புரோ 1' மற்றும் 'பாலோ அப் பார்முலா' ஆகிய மூன்று பால் பவுடர்களை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வு செய்தது. இப்பொருட்களின் விளம்பரங்களும் ஆய்வு செய்யப்பட்டன.'நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1' பொருளின் விளம்பரத்தில் '5 எச்.எம்.ஓ.,க்கள்' மற்றும் 'வெய் புரோட்டீன்' தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. '5 எச்.எம்.ஓ.,க்கள்' என்பது குழந்தைகளுக்கான உணவில் இடம்பெறும் தாய்பாலில் உள்ள சர்க்கரை சேர்க்கை தொடர்பான குறிப்பு; 'வெய் புரோட்டீன்' என்பது பாலில் உள்ள ஒரு புரதக் கூறாகும்.
இந்த சேர்க்கை குறித்து நெஸ்லே இந்தியாவிடம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விளக்கம் கேட்டது. இந்த விளம்பர தகவல்கள், குழந்தைகளுக்கான உணவு விதிமுறைகளுக்கு எதிரானவை என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.அதேபோல், 'லாக்டோஜென் புரோ 1' பால் பவுடர் விளம்பரத்தில், 'வெய் புரோட்டீன்' எளிதில் செரிமானமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் நெஸ்லே நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இணை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட நெஸ்லேவின் 'பாலோ அப் பார்முலா' பவுடர் ஒன்று ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில் பயோட்டின் எனப்படும் 'வைட்டமின் பி7' சத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப இல்லை என கண்டறியப்பட்டது. மறுசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டது.இந்த மூன்று பொருட்கள் தொடர்பாக, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. இதில், இரண்டு வழக்குகள் விளம்பர தகவல்கள் தொடர்பானவை. மற்றொரு வழக்கு பயோட்டின் அளவு தொடர்பான ஆய்வக பரிசோதனை முடிவை அடிப்படையாக கொண்டது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்துள்ள வழக்கிற்கு, 'நெஸ்லே' அளித்த விளக்கம்: 'நான் எக்செல்லா புரோ' மற்றும் 'லாக்டோஜென் புரோ' ஆகிய குழந்தைகள் உணவு பொருட்களும், அவற்றின் லேபிள்களும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் நிபுணர் குழுவால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவை. இவை நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்கியுள்ளன. 'லேபிள்'களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானவை தான். அவை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விரிவான விளக்கத்தை மீண்டும் அளித்துள்ளோம். அனைத்து சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் லேபிள் தகவல்கள் தொடர்பான விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.