×

சென்னையை உலுக்கிய லீஸ் மோசடி... ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி ஏமாற்றிய கும்பல்! 

 

சென்னை வேளச்சேரி வீடு லீஸ் மோசடி விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரை சந்திக்க விடவில்லை எனக் கூறி பணத்தை இழந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண் வெண்ணிலா. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரியில் லீசுக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது olx-ல் 7 லட்சத்திற்கு ஒரு வீடு இருப்பதை வெண்ணிலா பார்த்துள்ளார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் என்னை தொடர்பு கொண்டுள்ளார். அவரை தொடர்பு கொண்டு நேரில் வீட்டை சென்று பார்த்துவிட்டு, வீடு பிடித்துபோகவே அக்பர் ஷெரிப் என்பவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஒரு வாரத்தில் பெயிண்ட் அடித்து கொடுக்கிறோம் என சொன்ன அக்பர் ஷெரிப், பல வாரங்களாகியும் வீட்டையும் தரவில்லை, பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெண்ணிலா, இதுகுறித்து வேளச்சேரி போலீசிடம் புகார் அளித்தார். விசரணையில், வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷெரீப் கட்டப்பஞ்சாயத்து கும்பலை வைத்துக்கொண்டு துணிகர மோசடி ஈடுப்பட்டது தெரியவந்தது. அதாவது ஒரே வீட்டை 90 பேருக்கு காட்டி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் லீஸ் மோசடியில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும், சென்னை வேளச்சேரி வீடு லீஸ் மோசடி விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரை சந்திக்க விடவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். கோடி கோடியாக மோசடி செய்துவிட்டு பள்ளிக்கரணையில் பங்களா கட்டுவதாகப் புகார் கூறும் மக்கள், சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் விலை போய்விட்டதாகவும்,  மோசடி கும்பலுக்கு உடந்தை எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்டினர். ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா? என பாதிக்கப்பட்டவர்கள் குமுறும் வீடியோ வைரலாகிவருகிறது. லீஸ் விவகாரத்தில் ரூ.4.50 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளியில் நடமாடும் மோசடி கும்பலை போலீசார் கைது செய்யவில்லை என்றும், நாங்களும் இதேபோல் மோசடி செய்யலாமா? போலீஸ் அனுமதிக்குமா? எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மோசடி கும்பல் மீது 4 ஆண்டுகளாக புகார் அளித்தபோதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறும் மக்கள், ஊடகவியலாளர் பாதிக்கப்பட்ட பிறகே வீடு லீஸ் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறுகின்றனர்.