நூதன தண்டனை : நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வக்கீல் 1,000 பழ மரக்கன்றுகள் நட உத்தரவு..!
பெலகாவி மாவட்டம், கங்காவதியில் உள்ள முதன்மை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது வக்கீல் ரங்கசாமி மற்றும் பிற மனுதாரர்கள், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, மனு தாக்கல் செய்தனர்.
மேலும், மனுவை நீதிமன்றம் விசாரிக்கும் போது, நீதிபதியிடம் வக்கீல் ரங்கசாமி கண்ணியமின்றி நடந்து கொண்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், 'வக்கீல் ரங்கசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்றார்.
இந்த உத்தரவில் உள்ள கடுமையான வழிகாட்டுதல்களை திரும்ப பெற கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரங்கசாமி, மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு நீதிபதி ஹஞ்சடே சஞ்சீவ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது: சட்ட அறிவு கொண்ட ஒரு சிறந்த தலைவரால், வலிமையான மற்றும் ஆற்றல்மிக்க நாட்டை உருவாக்க முடியும். எனவே, நாம் யார் என்பதையும், சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்ன என்பதையும், சுயபரிசோதனை செய்து கொள்ள, இந்த வழக்கு நினைவூட்டலாக அமைந்து உள்ளது.
வக்கீல் ரங்கசாமி, எதிர்காலத்தில் தனது தொழில் வாழ்க்கையில் நடத்தையை திருத்தி கொள்வார் என்ற நம்பிக்கையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அரசு, கல்வி நிலையங்களில், 1,000 பழ மரக்கன்றுகளை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரிக்க வேண்டும். பல்லாரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துக்கு, 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வக்கீல் ரங்கசாமி, நீதிமன்றத்தில் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு ஏற்கப்படுகிறது.
அதே வேளையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை திரும்ப பெறவில்லை. தண்டனையில் வழங்கப்பட்ட விலக்கு என்பது குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டதாக அர்த்தமல்ல. வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுதாரருக்கு, விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.