×

ரஜினிகாந்தின் ஓய்வு எப்போது?- லதா ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

 

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் லதா ரஜினிகாந்தின் ஶ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட் எனும் பெயரில் பாரம்பரியக் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், குடிசைத் தொழில் பொருட்கள் கண்காட்சி நேற்று(மே1) தொடங்கியது. இந்தக் கண்காட்சி நாளை வரை (3ஆம்தேதி) வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான இன்று லதா ரஜினிகாந்த் கண்காட்சியைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நம் நாட்டில் உள்ள அடையாளங்கள் எல்லாம் அழியக்கூடாது. கைவினைப் பொருட்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும். நமது கலைகளைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுப் போய் சேர்க்க வேண்டிய கடமை உள்ளது. நமது வியாபாரிகள், விவசாயிகள் வாழ்ந்தால் நமது நாடு வளம் பெறும். இங்கு பாரம்பரியக் கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், குடிசைத் தொழில் ஆகியவற்றின் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியப் பொருள்களை வாங்கத் தொடங்கினால் இந்திய வியாபாரிகளின் வாழ்வாதாரம் முன்னேறும்.


கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களிலும் அடுத்தடுத்துக் கண்காட்சிகளை நடத்த உள்ளோம். அந்தந்த ஊர்களில் அழியக்கூடாது என்று நினைக்கிறப் பொருட்களை இந்தக் கண்காட்சியில் இடம்பெறச் செய்யலாம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சாலையோர வியாபாரிகளிடம் வாங்குகிறார்கள். ஆனால் நம் ஊரில் அனைவரும் மால்களுக்குச் சென்று வாங்கிப் பழகி விட்டார்கள். அதனால் நமது வியாபாரிகளின் வியாபாரம் குறைந்துள்ளது. நான் எது செய்தாலும் ரஜினியிடம் பகிர்ந்து கொண்டு தான் செய்கிறேன். அவருடைய ஆதரவு இருப்பதால்தான் இவற்றையெல்லாம் நான் முழுமையாகச் செய்ய முடிகிறது. ரஜினிகாந்த் ஓய்வு குறித்து எனக்குத் தெரிந்தால் நான் சொல்லலாம். இன்னமும் அது பற்றி யோசிக்கவில்லை. ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார். எந்த ஒரு நாட்டிலும் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்வது தவறில்லை.

வெளி நாடுகளில் இருந்து, இந்தியாவில் உள்ள யோகாவை எடுத்துக் கொள்கிறார்கள். நமது தமிழர்கள் பண்பாகப் பேசக் கூடியவர்கள். ஆனால் இன்றைக்கு இருக்கும் கலாச்சாரம் மரியாதையே இல்லாமல் பேசுகிறார்கள். சமூக வலைதளங்களில் வயதிற்கோ தகுதிக்கோ மரியாதை இல்லாமல், ஒரு பாஷையில் பேசுகிறார்கள். இது தமிழர்களின் கலாச்சாரம் கிடையாது. வெளிநாட்டு மோகத்தில் போய் நாம் மூழ்கி விடக்கூடாது. வேண்டாத விஷயங்களை அவர்களே தவிர்க்கப் பார்க்கிறார்கள், நாம் அதில் மூழ்கி விடக்கூடாது” என்றார்.