×

"லேட்ரல் என்ட்ரி மாணவர்கள் நேரடியாக பி.காம். 2ஆம் ஆண்டில் சேரலாம்" - அரசாணை வெளியீடு!

 

பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் டிப்ளமா படிப்பு, மாடர்ன் ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமா படிப்பு ஆகிய 3 ஆண்டு படிப்புகளில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக 2ஆம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம். படிக்கும்போது தட்டச்சு தமிழ் அல்லது ஆங்கிலம் படிக்கலாம். படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு ஹையர் கிரேடு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இந்த முறை தான் தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது.

இச்சூழலில் வணிகவியல் டிப்ளமா, வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு டிப்ளமா படித்தவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக 2ஆம் ஆண்டு பி.காம். படிப்பில் சேர (லேட்ரல் என்ட்ரி) வழிவகை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "வணிகவியல் பயிற்சி மற்றும் நவீன அலுவலக பயிற்சி தொடர்பான டிப்ளமா படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், பி.காம். படிப்பில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேர வகை செய்யும் லேட்ரல் என்ட்ரி முறை 2022-2023ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மாணவர்கள், அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், அனைத்து வகை பி.காம். பாடப் பிரிவுகளிலும் சேரலாம். அவர்களுக்காக அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலம் கூடுதலாக 10% இடங்கள் உருவாக்கப்பட வேண்டும். டிப்ளமா படிப்பின்போது மொழித்தாள்-1 (தமிழ்) படிக்காதவர்கள், பி.காம். படிப்பு காலத்துக்குள் மொழித்தாள் தேர்ச்சி பெற வேண்டும். லேட்ரல் என்ட்ரி முறையில் பி.காம். சேரும் வணிகவியல் டிப்ளமா மாணவர்களுக்கு, கிரேடு அல்லது வகுப்பு குறிப்பிட்டு பட்டம் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களும் இதை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.