ரேஷன் கார்டுதாரர்களுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு! 3 மாத அவகாசம்... மிஸ் பண்ணா அவ்ளோதான்!
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ரேஷன் கார்டுகள் உடனடியாக ரத்து செய்யப்படாது; அவர்களின் பெயர்களும் தரவுத்தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படாது. சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களின் தகுதியை உறுதி செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசத்திற்குள் பயனாளிகள் தங்களது மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) நடைமுறையில் தங்கள் தகுதியை உறுதி செய்யலாம். தேவைப்படும் இடங்களில் அதிகாரிகளை வைத்து கள ஆய்வும் நடத்தப்படும். இதன் மூலம் தகுதி உறுதி செய்யப்பட்டால், முடக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழக்கம்போல் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்கப்படும் ரேஷன் கார்டுதாரர்கள், அடுத்த 3 மாதங்களுக்குள் e-KYC மற்றும் தேவையான கள ஆய்வுகள் மூலம் தங்களது தகுதியை உறுதிசெய்தால், கார்டுகள் உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கணினிமயமாக்கல், ஆதார் இணைப்பு மற்றும் தரவு சரிபார்ப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கான e-KYC பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் விவகாரத்தில் தகுதியான குடும்ப அட்டை தாரர்களை பாதிக்காதவகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.