×

கடைசி வாய்ப்பு! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க இதுவே கடைசி வாய்ப்பு..!
 

 

ஒரு குழந்தையின் பிறப்பைத் தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்வது அந்த குழந்தையின் அடிப்படை உரிமையாகும். இதுவே அக்குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான முதன்மையான அத்தாட்சியாகும். 1969-ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், வெறும் பிறப்புச் சான்றிதழ் மட்டும் போதுமானதல்ல; அதில் குழந்தையின் பெயர் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமையான மற்றும் செல்லத்தக்க ஆவணமாகக் கருதப்படும்.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் (Driving License), பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவது வரை அனைத்து இடங்களிலும் பிறப்புச் சான்றிதழ் இன்றியமையாதது. குறிப்பாக, வெளிநாட்டில் குடியேற நினைப்பவர்களுக்கு இது மிக முக்கியமான ஆவணம். தற்போது மத்திய அரசு பிறப்புச் சான்றிதழை அனைத்து அரசுச் சேவைகளுக்கும் "ஒற்றை அடையாள ஆவணமாக" (Single Document) மாற்றத் திட்டமிட்டுள்ளது. எனவே, பெயர் இல்லாத சான்றிதழ்கள் மூலம் வருங்காலத்தில் எந்தவொரு அரசுப் பலன்களையும் பெற முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தையின் பிறப்பு பெயரின்றிப் பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளித்துப் பெயரைப் பதிவு செய்யலாம். ஒருவேளை 12 மாதங்கள் கடந்துவிட்டால், 15 ஆண்டுகள் வரை 200 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்திப் பெயரை இணைக்கலாம். சட்டப்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பெயர் சேர்க்க இயலாது என்ற நிலை இருந்த போதிலும், தற்போது இந்தியத் தலைமைப் பதிவாளரின் சிறப்பு அறிவுறுத்தலின்படி ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி காலவகாசம் வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.01.2000-க்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும், 01.01.2000-க்குப் பிறகு 15 ஆண்டுகள் கடந்த பதிவுகளுக்கும் பெயர் சேர்க்கும் கால அவகாசம் தற்போது 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களின் சான்றிதழில் பெயர் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை அணுகி, கல்விச் சான்றிதழ் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.