நாடே எதிர்பார்த்த வழக்கில் முக்கிய தீர்ப்பு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கும் இரட்டை தூக்குத் தண்டனை..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை நடத்தியதாக இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையின்போது காவல்துறையினர் இருவரையும் கொடூரமாக தாக்கினர். மேலும், இருவரின் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
காவலர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் ஜுன் 23-ம் தேதி சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனிடையே, காவல்துறை விசாரணையில் தந்தை-மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. மாநில காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சுமார் 2,500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இதனிடையே, 2020 ஆகஸ்ட் மாதம் பால்துரை என்பவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நீதிபதி முத்துக்குமரன் இன்று தண்டனை விவரங்களை வாசித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அதிரடியாக அறிவித்தார்.
தண்டனை விவரத்தை வாசிக்கும் முன் நீதிபதி, "சாத்தான்குளம் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்றும், இந்த வழக்கில் லாக் அப் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று மாநில அரசும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசும் பரிந்துரைத்துள்ளன” என்றும் தெரிவித்தார்.
மேலும், "காவல் நிலைய மரணம் மிக கொடியது. தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும். பழி வாங்க வேண்டுமென்ற நோக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை பறக்கவிட்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். காவல் துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதை கொடுமையாகவே கருத வேண்டும்," எனவும் தெரிவித்தார்.
அத்துடன், "காவல் நிலைய மரணம் என்பது மனிதநேயமற்ற செயல். குற்றமிழைத்தவர்கள் மனிதர்களாகவே வாழ தகுதியற்றவர்கள். எனவே குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. காவல் துறையினரின் செயலை வாசித்தாலே மனம் பதைபதைக்கிறது. எனவே இதுபோன்ற காவல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அது மற்ற காவல் துறையினருக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாது.
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சாத்தான்குளம் சம்பவம் சமூகத்தின் வளர்ச்சியை ஒடுக்கும் வகையில் உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தண்டனை இருக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி முத்துக்குமரன் கூறினார்.
குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு பிரிவுகளில் தனித்தனியாக சிறை தண்டனை, அபராதம் மற்றும் இரட்டை தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தம் ரூ.1 கோடி 40 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.