பயங்கர வெடி சத்தம்... குலுங்கிய கும்பகோணம்
கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் திடீரென வானில் ஏற்பட்ட பலத்த சத்தம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நலன் கருதி கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி விடுமுறை விடப்பட்டது.
கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இந்த சத்தம் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்றனர்.
கல்லூரியில் இருந்து மாணவிகள் வெளியேறியதும் காவல்துறையினரும் கல்லூரியை விட்டு வெளியேறினர். பெரிய அளவில் சத்தம் கேட்டதாகவும் இது போல் சத்தம் நாங்கள் கேட்டதில்லை எனவும் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர். இதனிடைய கும்பகோணம் வட்டாட்சியரிடம் கேட்டபோது, இந்த சத்தம் ராணுவ விமானத்தின் சத்தம் என்றும் வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.