கோயில் திருவிழாவில் மோதல்...! 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை!
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது பூச்சொரிதல் நிகழ்வில் இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ளனர். அப்போது 17வயதான பிச்சுவா என்ற இளைஞர் நடனமாடியவர்களை பார்த்து ஓரமாக சென்று நடனமாடுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் பிச்சுவாவிடம் தகராறில் ஈடுபட்டதோடு கத்தியால் அவரை குத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பிச்சுவா மீது கத்தியால் குத்துவதை பார்த்து தடுக்க சென்ற அஜய் என்ற இளைஞருக்கும் குத்து விழுந்துள்ளது.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவன் பிச்சுவா மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.