திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள்- ஜவாஹிருல்லா
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சர்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்திற்கு அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு என்பது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுக்கும் அமைப்பு அல்ல; சட்டம், மரபு, வரலாறு மற்றும் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டிய அமைப்பு!
மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. திருப்பரங்குன்றத்தின் பாரம்பரியமும் மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல; அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம்! தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.