×

மத்திய அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கே.எஸ்.அழகிரி காட்டம்

 

மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையான  தமிழகம் விளங்குகிறது. சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலம்  ஏவி, பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. அமைச்சர்கள் மீதும், எதிர்கட்சித் தலைவர்கள் மீதும் பல்வேறு சோதனைகள், வழக்குகள் என அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். 

ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் 31 மார்ச் 2023 நிலவரப்படி ரூபாய் 153 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 31 மார்ச் 2024 இல் 169 லட்சம் கோடி ரூபாயாக 2023-24 நிதியாண்டில் உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 16 லட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய கடனை ஆய்வு செய்கிற போது, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகுகிற போது, 31 மார்ச் 2014 அன்று இருந்த மொத்த கடன் ரூபாய் 58.6 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 52.2 சதவிகிதமாகும். ஆனால், இது 9 ஆண்டுகளில் 2023 இல் 174 சதவிகிதமாக அதிகரித்து ரூபாய் 155.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57.1 சதவிகிதமாகும். அதேபோல, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2014 முதல் 2023 வரை 100 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 2014 இல் ரூபாய் 3 லட்சத்து 74 ஆயிரத்து 484 கோடியாக இருந்தது. 2023 இல் ரூபாய் 7 லட்சத்து 48 ஆயிரம் 895 கோடியாக உயர்ந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போது மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 2023 இல் 153 லட்சம் கோடியாக, அதாவது ஏறத்தாழ 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு கடன் சுமையை ஏற்றியிருக்கிறது. உள்நாட்டுக் கடனும், வெளிநாட்டுக் கடனும் இந்தியாவை திவாலான நாடாக உலக அரங்கில் பறை சாற்றிய பெருமை மோடி அரசுக்குத் தான் உண்டு.

இத்தகைய முயற்சிகளுக்கு இடையூறாக இயற்கையின் சீற்றத்தினால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க ஒன்றிய அரசிடம் கேட்ட மொத்த நிவாரண தொகை ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடி. ஆனால், இதுவரை ஒன்றிய பா.ஜ.க.  அரசு ஒரு ரூபாய் நிதி கூட தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் வழங்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த ஆணவத்தோடு அறிவித்ததை தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.  ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6,000 வீதம் மொத்தம் ரூபாய் 1487 கோடி உதவித்தொகை வழங்கியிருக்கிறார். அதேபோல, பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 உதவித்தொகையுடன் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு என எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் இதை வழங்குவதோடு, மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயும் சேர்த்து ஒன்றாக வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். 

ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டு பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியும், எதிர்கட்சிகள் ஆளும் தமிழகத்தைப் போன்ற மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி வழங்குதையும் தொடர்ந்து கடைபிடிப்பதை நிர்மலா சீதாராமன் நியாயப்படுத்தி பேசி வருகிறார். அதற்கு நறுக்கென்று ஒரே வார்த்தையில் பதில் அளித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், ஒன்றிய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு நேரடியாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இயற்கை பேரிடரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.