கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்- கிருஷ்ணசாமி
10 நாட்களுக்கு மேலாகியும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தெரியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இ.பத்மஜா, இ.ஆ.ப. அவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து, 10 நாட்களுக்கு மேலாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாகச் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும், மாவட்ட ஆட்சியர் ஏன் மௌனம் காக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெறும் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டும் கூட ஆவார். ஒருவேளை அந்த சட்டமன்ற உறுப்பினர் தனக்குத் தவறான அல்லது ஆபாசமான, சட்டவிரோதமான செய்தியை அனுப்பியிருந்தால், அவரே பரிந்துரைத்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை அதிகாரமும் அவரிடம் உண்டு. இதற்காக அவர் காவல்துறையை அணுக வேண்டியதோ அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. இவ்வளவு அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு அவர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது.
இதை தனி நபருக்கான பிரச்சினையாகக் கருதக் கூடாது. ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைமை தாங்குபவர். அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்றால், அது மக்களுக்கான பிரச்சினையாகவே கருதப்பட வேண்டும். எனவே, அவர் தொடர்ந்து மௌனம் காப்பது சரியல்ல. இப்பிரச்சனைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் தனது மௌனத்தைக் கலைத்தால்தான், உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இல்லையென்றால், ஊகங்களின் அடிப்படையில் யார்மீதாவது குற்றம் சாட்டுவதும் அல்லது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதும் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது மௌனத்தைக் கலைத்து, நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, ஊகங்களின் அடிப்படையில் விவாதமாகி வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.