×

வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா?- கிருஷ்ணசாமி

 

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய கனவுத் திட்டமான ரூ.27,000 கோடி பசுமை விமான நிலையத் திட்டம் வெறும் கனவாகவே போய்விடாதா? என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் சென்னை விமான நிலையம் அருகே புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க ’பரந்தூர்’ என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ₹27,500 கோடி நிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஏறக்குறைய 5,846 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யத் திட்டமிடப்பட்டு, இதுவரை 1,802 ஏக்கர் நிலம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. எனினும், மிக முக்கியமான அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் கிராம மக்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.

ஒரு தொழில்—சிட்கோ (SIDCO), சிப்காட் (SIPCOT) அல்லது இதுபோன்ற விமான நிலையங்கள் அமைப்பதற்குப் பொதுவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களே தேவைப்படுகின்றன. அந்த இடங்களைத் தேர்வு செய்கின்ற பொழுது பெருநகரங்களிலிருந்து இணைப்பு, எதிர்கால வளர்ச்சி, துறைமுகங்கள் மற்றும் பிற போக்குவரத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில்கொண்டே இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்படுகின்ற பொழுது, நிலங்களுக்கு கூடுதல் விலை மற்றும் நிலத்தின் மீதான தீராத பற்று ஆகியவற்றின் காரணமாக, அந்தப் பகுதி மக்கள் நில ஆர்ஜிதங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்பது நாடெங்கும் இருக்கக்கூடிய பிரச்சனை. இப்போது விமானப் பயணம் என்பது சர்வசாதாரணமாக அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக மாறியுள்ளது. வரக்கூடிய காலகட்டங்களில் 90% பேர் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படும்.

பசுமை விமான நிலையம் என்பது பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கியது. வெறும் உள்நாட்டுப் பயணிகள் மட்டும் பிரயாணம் செய்யக்கூடியது அல்ல; பிற சர்வதேச நாடுகளுக்கும் பயணிக்கும் கேந்திரமாக இந்த விமான நிலையம் அமையும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய பல்வேறு விதமான மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இதுபோன்ற பெரிய விமான நிலையங்கள் முக்கியமான இடத்தைப் பெறும். அந்த நோக்கத்தோடு அமையப்பெற்ற பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து முதலமைச்சட் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அந்த மக்களைச் சந்தித்து வாக்குறுதி கொடுத்தார் என்பது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக அமர்ந்த பிறகு, ஏற்கனவே அந்த திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் 75% முடிந்த பிறகு அதை ரத்து செய்வது, ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஒரு மிகப்பெரிய திட்டத்தை நழுவ விடுவது ஆகாதா? 

இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India - AAI) ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டப் பிறகு, இந்த இடம் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால், மாற்று இடம் கூட தேர்வு செய்யப்படாத நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது துளியும் ஏற்புடையது அல்ல. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக அரசுகள் தமிழகத்தினுடைய எல்லையிலேயே போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய விமான நிலையங்களைக் கட்டி வருகின்றன. இந்த ஒரு தருணத்தில் இவ்வளவு பெரிய தொகையில் கட்டக்கூடிய விமான நிலையத் திட்டத்தை வலிந்து விட்டுக்கொடுப்பது, சர்வதேசத் தொழில் முதலீடுகளுக்கும் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு பயணிப்பவர்களுக்குமான தவறான சமிக்ஞையாக அமைந்துவிடாதா? இதுபோன்ற விமான நிலையங்கள் இப்போது தொடங்கினாலே பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகும். பரந்தூரை ரத்து செய்துவிட்டு, இன்று இருக்கக்கூடிய சென்னை விமான நிலையம் அருகிலேயே எப்படி 5,000 ஏக்கர் நிலத்தை—அதுவும் நீர்நிலைகள் இல்லாத, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவேளை இதே பரந்தூர், ஏகனாபுரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அங்கும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால், அப்போது எந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியும்? தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய கனவுத் திட்டமான ₹27,000 கோடி பசுமை விமான நிலையத் திட்டம் வெறும் கனவாகவே போய்விடாதா? இதுபோன்ற ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பாவது அனைத்துக் கட்சியினர், அனைத்துத் தரப்பினரையும் அழைத்து பேசி ஒரு சரியான முடிவை எடுத்திருக்கலாமே? "நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன்; அதைக் காப்பாற்றுவேன்" என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் ”பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது” நியாயமாக தென்படவில்லை. மறுபரிசீலனை செய்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.