×

"60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” - கிருஷ்ணசாமி

 

கூட்டணி குறித்து பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும், கூட்டணி குறித்து கதவை திறந்து வைத்திருக்கிறோம். நல்ல காற்று வந்தால் ஏற்றுக் கொள்வோம் என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக அரசு அதற்கு செவி சாய்க்காமல் மின்சாரம் போக்குவரத்து வசதிகள் ரேஷன் பொருட்களை எல்லாம் வழங்காத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொழிலாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரத்தில் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நேற்றைய தினம் மின்சாரம் முழுமையாக மாஞ்சோலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் ரேஷன் பொருட்கள் அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகம் மீது உரிய  நடவடிக்கை  எடுப்போம்.தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 12 அல்லது 14ஆம் தேதிக்கு உள்ளாக கூட்டணி குறித்து முடிவெடுத்து விடுவோம்.தமிழகத்தில் நல்ல அரச அமைய வேண்டும். அதற்காக நாங்கள் முடிவு செய்வோம். ஆளுங்கட்சியில் இருக்கும் காங்கிரஸோ அல்லது மற்ற கட்சியும் இன்னும் நாங்கள் கூட்டணியில் இருப்போம் என்று கூறுகிறார்கள் தவிர சீட்டுகளை பற்றி இன்னும் பேசவில்லை. ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வந்தால் கூட எல்லா கிராமத்திலும் முறையாக குடிநீர் வசதிகள் கிடைப்பதில்லை.நாங்கள் பங்குபெற்றதும் மோசமான ஆட்சியையும் நல்லாட்சியாக மாற்றுவோம். அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தினர் தங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனவும் சொல்ல மாட்டேன் வரவேண்டாம் எனவும் கூற மாட்டேன். அனைவரும் ஓபனாக  இருக்கின்றனர். கதவை திறந்து வைத்திருக்கிறோம் நல்ல முறையிலான  காற்று வந்தால் திறந்து வைப்போம். மோசமான காற்று வந்தால் கதவை மூடிவிடுவோம். 60 தொகுதி முதல் 70 தொகுதி வரை நாங்கள் பங்கேற்கும் கூட்டணிகள் வெற்றி பெறக் கூடிய அளவில் எங்களது வாக்கு வங்கி இருக்கிறது. தனித் தொகுதியை விட பொது தொகுதிகளில் என்னுடைய வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.