×

கிருஷ்ணகிரி : ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து.. 

 

கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்தவர் சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி நகர் பகுதியில் ஆதம் டெக்ஸ்டைல் என்ற துணிக்கடை நடத்தி வருகிறார். சுல்தான் ஷெரிப் வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில்,  இன்று காலை திடீரென கடையில் இருந்து புகை மூட்டம் வந்துள்ளது. இதனைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள்  சுல்தான் ஷெரிப்புக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கடைக்கு வந்த சுல்தான் ஷெரிப் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த  துணிகள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தன.  

இதனை அடுத்து சுல்தான் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து கிருஷ்ணகிரியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.  ஆனால் அதற்குளாக  தீ மளமளவென கட்டினடித்தின் இரண்டாவது தளத்திற்கும் பரவியது. பின்னர் பர்கூரில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு 20 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இதனை அடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.