×

“சாராயத்தை குடிச்சிட்டு, பெண்களுடன் நடனம்... 100 பேரை அடிப்பது போல் ஷோ! இவங்களாம் ஏன் அரசியலுக்கு வரணும்”- கே.பி.முனுசாமி

 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரவுண்டானா பகுதியில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, “பொது மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடிய கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார், குடித்துவிட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது, குடித்தவனை கண்டித்து திருத்தும் கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். படத்திலேயும் நேர்மையான மனிதநேயமிக்க, தாய் பாசம் கொண்ட நல்லவராக நடித்தவர். அவர் சம்பாதித்த பணம் முழுவதையும் மக்களுக்காக கொடுத்தவர் அதனால் தான் அவரை எட்டாவது கொடைவள்ளல் என அழைப்பார்கள். எந்த நடிகனாவது அவ்வாறு கொடுத்து உள்ளார்களார்களா? . தொடர்ந்து திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய துரைமுருகனின் கல்வி செலவை கொடுத்தவர் எம்ஜிஆர். அதை துரைமுருகனை மேடையில் கூறியுள்ளார்.

இயேசுபிரானை நாம் நேரில் பார்த்ததில்லை, ஆனால் அவர் சொன்ன கருவிற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். தன்னுடைய கடைசி காலத்தில் தான் வாழ்ந்த வீட்டை தன்னுடைய உறவினர்களுக்கு கொடுக்கவில்லை, மாறாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கியவர் தான் எம்ஜிஆர். அப்படிப்பட்ட எம்ஜிஆர் போன்ற நடிகர் எங்கே, தற்பொழுது இருக்கக்கூடிய நடிகர்கள் எங்கே என்று சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய நடிகர்கள் சாராயத்தை குடித்துவிட்டு, பாடல் போட்டு பெண்களுடன் நடனம் ஆடுகிறார்கள், 100 பேரை அடிப்பது போல் ஷோ காட்டுவார்கள் அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள். ஒருவர் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை மக்களை நேசிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். ஏழை மக்களின் உணர்வுகளையும் அவர்களது நிலைகளையும் அறிந்து கொண்டு அவர்களுக்காக போராடக்கூடிய சிந்தனையுள்ள தலைவன் கட்சி நடத்த வேண்டும், நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும், அப்படிப்பட்ட சிந்தனையுடைய தலைவர் அதிமுகவை உருவாக்கியது மட்டும் இல்லாமல் கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனையும் அதே தாய் உள்ளம் கொண்ட சிந்தனையோடு உருவாக்கியுள்ளார். அந்த தலைவருக்கு தான் பிறந்தநாள் நிகழ்ச்சி எடுத்துள்ளோம் இந்த நாளில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி மலர வேண்டும் என நாம் சபதம் ஏற்போம்” என பேசினார்.