கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி மொத்தமா காலி...! சேலத்தில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
சேலம் சினிமா நகர் பகுதியில் உள்ள வெள்ளிக் குடோனில் 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான இந்தக் குடோனில் முகமூடி அணிந்து வந்த 4 பேர், காவலாளியைத் தாக்கிவிட்டு வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள சினிமா நகர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் அமைந்துள்ளது. கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி, காப்பு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
நேற்றிரவு காரில் வந்த முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள், காவலாளி தாக்கி, அங்கேயே கட்டிப்போட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர். குடோனின் உள்ளே சென்ற அந்த கும்பல் 600 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும். மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.