×

கோடநாடு வழக்கு : எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர், சசிகலாவிடம் விசாரனை நடத்த முடிவு..

 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர் மற்றும் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க விசாரணை குழு  முடிவு செய்துள்ளது.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது கொடநாடு பங்களாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.  நள்ளிரவு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்து விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக  11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,   முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தனது மனைவியுடன் காரில் செல்லும்போது சாலை விபத்தில்  உயிரிழந்தார்.  

அத்துடன் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.  அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட  கேரள கூலிப்படை தலைவன் சயான் உள்ளிட்ட  10 பேரும் தற்போது  ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக   சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்த  கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்திருக்கிறார். கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.  

மேலும், எடப்பாடியைச் சேர்ந்த ஜோதிடர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோருக்கும்  சம்மன் அனுப்பி மே முதல் வாரம் முதல் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.  முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கனகராஜிடம் கடந்த வாரம் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியதில்,  கார் ஓட்டுநர் கனகராஜுடன் அவர் 100க்கும் மேற்பட்ட முறை செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்நிலையில் கடைசியாக ஓட்டுநர் கனகராஜ்  ஜோதிடரை சந்தித்த போது, அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதாகவும், அந்த ஒரு கண்டத்தை தாண்டிவிட்டால் வாழ்க்கையில் வெற்றிபெறுவார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால்  ஜோதிடரை சந்தித்துவிட்டு திரும்பிய அன்று இரவே  கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.