×

வெளுத்துவாங்கும் கனமழை... கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அதீத கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீரோடைகள், ஆறுக‌ள், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. டம் டம் பாறையிலுள்ள தலையார் அருவி,வெள்ளி நீர் வீழ்ச்சி அருவிகளிலும் வட்டக்கானல் அருவி, கரடி சோலை அருவி, தேவதை நீர் வீழ்ச்சி, பம்பார் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளன.

மழை காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது. மழை, குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள்  வீட்டை விட்டே வெளியேற முடியாத சூழலும் உண்டாகியுள்ளது. சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தே காணப்படுகிறது.

தற்போது கொடைக்கானலில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ளமுக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.