×

கொடைக்கானலில் குவியும் கூட்டம்- போக்குவரத்து ஸ்தம்பிப்பு

 

கொடைக்கானலில் தொடர்ந்து மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமல்படுத்தியதன் காரணமாக நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து இருந்த நிலையில், விடுமுறையான இன்றும் சுற்றுலா மேல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனத்துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த அறிவிப்பின்படி கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை  gpay, phone pe மூலம் மட்டுமாகவே நுழைவு கட்டணம் வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சுற்றுலா முகப்பு பகுதியாக இருக்கக்கூடிய பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் தங்களுடைய சோதனை சாவடியை அமைத்து கட்டணத்தை வாங்கி வருகிறார்கள். அப்படி கட்டணம் வாங்கும் பொழுது பசுமை பள்ளத்தாக்கு மற்றும் வனத்துறை நுழைவு வாயிலில் செல்போன் சிக்னல் முழுமையாகவே இருக்காது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி சிறிது தூரம் நடந்து வந்து தங்களுடைய நுழைவு கட்டணத்தை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்து பழைய படியே நுழைவு கட்டணத்தை பணப்பரிவர்தனை மூலம் வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் இன்று பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வியாபாரிகள் வனத்துறையினர் தங்களுடைய சோதனை சாவடியை மாற்றி அமைக்க வேண்டும், சோதனை சாவடி பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் வைத்துள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்து வருவதாகவும் பசுமை பள்ளத்தாக்கு வியாபாரிகள் தெரிவித்து வரக்கூடிய நிலையில் சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சோதனை சாவடியால் கடும் போக்குவரத்தின நெரிசல் ஏற்படுகிறது.