×

கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை..

 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் சவரியா பசந்த் என்ற மாணவி உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இவரின் நண்பர் சதரூல் ஆனம். மலப்புரத்தைச் சேர்ந்தவர். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சதருல் ஆனம், தனதுகையில் வைத்திருந்த லேப்டாப்பால் சவரியா பசந்தை தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த சவரியா பசந்த் மயங்கி விழுந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சதரூல் ஆனமை உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.உயிரிழந்த சவரியா பசந்த்தின் தந்தை உஸ்பெகிஸ்தான் சென்று மகளின் சடலத்தை சொந்த ஊர் கொண்டு வந்தார். இந்நிலையில், ஹரிபாடு போலீஸ் ஸ்டேசனில் குடும்பத்தினர், இந்த கொலை குறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் , சவரியா பசந்த் உடலை ஆலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி பினுகுமார் கூறியதாவது: குற்றம் இந்தியாவிற்கு வெளியே நடந்திருந்தாலும், கேரளாவில் வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் உள்ளது.சம்பவம் உஸ்பெகிஸ்தானில் நடந்திருந்தாலும், இங்கு வழக்குப்பதிவு செய்வதற்கான விதிமுறைகள் உள்ளன. குற்றவாளி அங்கு கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விவரம் குறித்தும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை குறித்தும் தெரிந்து கொள்ள இந்தியத் தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் வாயிலாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.