பள்ளிக்கல்வித்துறையின் ‘மாணவர் மனசு’ திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசு - அன்பில் மகேஷ் பெருமிதம்..!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ‘மாணவர் மனசு’ பெட்டி திட்டத்தை கேரள அரசும் செயல்படுத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரசு பள்ளிகளில் சிறப்பு திட்டமாக மாணவர் மனசு பெட்டி திட்டத்தை அறிவித்து அதனை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து “ஆசிரியர் மனசு” திட்டமும் செயல்படுத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களின் விருப்பம், ஆலோசனை, கோரிக்கை ஆகியனவற்றை கடிதமாக எழுதி மாணவர் மனசு பெட்டியில் செலுத்தும் கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகளுக்கு நேரில் ஆய்வுக்கு செல்லும் போது முதல் நிகழ்வாக மாணவர் மனசு பெட்டியில் உள்ள கடிதத்தை படித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். தலைமை ஆசிரியர்களும் மாணவர் மனசு பெட்டி கடிதங்கள் மீதும் உரிய தீர்வுகண்டு வருகிறார்கள்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த மாணவர் மனசு பெட்டி திட்டத்தை தற்போது கேரளா அரசும் “சுரக்சா மித்ரம்” என்ற பெயரில் செயல்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.