கேரளா, கர்நாடகாவுல மாறுச்சு... ஆனா தமிழ்நாட்டுல மட்டும் ஏன் மாறல? மெட்ராஸ் உயர் நீதிமன்ற பெயரை மாற்ற சி.வி.சண்முகம் கோரிக்கை..!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம், "1967 ஆம் ஆண்டுக்கு முன்பு 'மெட்ராஸ் மாகாணம்' என்று இருந்தது பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 'மெட்ராஸ் மாகாணம்' என்பதை 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிக் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்றைக்கு அனைத்து ஆவணங்களும் 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டுவிட்டது.
ஆனால் ஒன்று மட்டும், அதாவது 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' மட்டும் இன்று வரை 'மெட்ராஸ் உயர்நீதிமன்றம்' என்று தான் சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் கர்நாடக உயர் நீதிமன்றம், ஆந்திர மாநிலத்தில் ஆந்திர உயர் நீதிமன்றம், தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா உயர் நீதிமன்றம், கேரளம் மாநிலத்தில் கேரளம் உயர்நீதிமன்றம் என்று சொல்கிறோம். மூன்று நீதிபதிகளை கொண்ட மணிப்பூரில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் என்று தான் சொல்கிறோம். ஆனால் இன்றுவரை 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' பெயர் மாற்றப்படவில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது அன்றைக்கு இருந்த பிரதமரிடம் கொண்டு சென்று சட்டத்திருத்தத்தின் மூலம் 'சென்னை உயர் நீதிமன்றம்' என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது, கல்கத்தா, பாம்பேவும் பெயர் மாற்றம் வேண்டும் என்று சொன்னார்கள். பெயர் மாற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்கள். அப்போது, கல்கத்தா மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னதால், சட்ட முன்வடிவுத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகு 'சென்னை உயர்நீதிமன்றம்' என்பதை 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்' என்று மாற்றியமைக்க வேண்டும் என்று திருத்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை, செயல்படுத்தப்படவில்லை. என்னுடைய ஒரே கோரிக்கை, சட்ட அமைச்சர் மூலமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டமன்றத்திலே சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்பதை 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என்று வெற்றி ஆட்சியில் பெயர் மாற்றிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.