#KarurTragedy “மகனோட சடலம் வந்திருக்கு..”- பார்க்க முடியாமல் கதறிய பார்வையற்ற தாய்
பவானி அருகே பார்வையற்ற தாயுடன் வசித்து வந்த கல்லூரி மாணவர் (தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ) கரூர் கூட்ட நெரிசலில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட பழநி ஆண்டவர் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பார்வையற்ற மாற்று திறனாளி சாந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த மகன் மோகன் (19).நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக நரம்பு கோளாறு காரணமாக பார்வை இழந்த சாந்தி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார், மேலும் இவரது கணவரான கந்தசாமி பெயிண்டிங் வேலை பார்க்கும் நிலையில் வெளியூருக்கு சென்று தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் விஜயின் தீவிர ரசிகராக இருந்து வந்த மோகன் விஜய் கட்சி தொடங்கிய பின்னர், அரசியலிலும் அதிக அளவில் ஈடுபாடு செலுத்தி வந்த நிலையில் நிர்வாகிகளால் கோவை மண்டல சமூக ஊடக அணி இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்தியது மட்டுமின்றி பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு தனது பார்வையற்ற தாயையும் கவனித்துக் கொண்டு கல்லூரி படிப்பிலும் ஈடுபாடு செலுத்தி வந்துள்ளார்.
நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் நடிகர் விஜயின் பரப்பரைக்கு கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றி கழக கட்சியினருடன் மோகன் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கட்சி பரப்புரை நிகழ்ச்சிக்காக சென்ற மோகன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்த இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது பெரியம்மா வசந்தா கூறுகையில், “மிகவும் தாய் மீது அக்கறை கொண்ட மகன் கடந்த 10 ஆண்டுகளாக அதிகாலை எழுந்து உணவு சமைப்பது முதல் அம்மாவை கவனிப்பது வரை அனைத்து வேலைகளும் செய்து வந்ததார். மிகவும் குடும்ப பாங்குடன் செயல்பட்டு வந்ததார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.