×

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலி- நாளை கடையடைப்பு

 

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தவிருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார். அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் விஜய் அந்த பிரசார கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியின் அருகே உள்ள கடையின் முன்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பலர்  காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இதுவ்ரை பலியாகியுள்ளனர்.

கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.