12 நாட்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பிய கரூர் வேலுச்சாமிபுரம்! போலீஸ் கட்டுப்பாடுகள் தளர்வு
கரூர் வேலுச்சாமிபுரம் 12 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. காவல்துறையின் கட்டுப்பாடு திரும்ப பெறப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார் விஜய். இதனால் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் ஊருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சாலைகளில் மக்களின் காலணிகள், கட்சி கொடிகள் என வேலுசாமிபுரம் போர்க்களமாக காணப்பட்டது. வேலுச்சாமிபுரம் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு அறிவித்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் நீதிமன்றம் அறிவித்திருந்த சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் என பலர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடம் தற்போது வரை காவல்துறை கட்டுப்பாட்டில் கண்காணிக்கப்பட்டு வந்தது. 20க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் இப்பகுதியை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதி முழுவதையும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த பேரிகார்ட் மற்றும் கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து வேலுச்சாமிபுரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.