×

கரூர் துயரம் : விரைவில் கரூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்..! 

 

தவெக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் " நீதி வெல்லும் " என ஒற்றை வரியில் பதிவிட்டார். இந்தப் பதிவு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைப்பதாகவும், தனது கட்சியின் முயற்சியில் கிடைத்த வெற்றிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்பட்டது..

சட்டப் போராட்டத்தில் வெற்றி கண்ட நிலையில், விஜய் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, அவர் கரூருக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பிற்காக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், அவர்களைத் தனித்தனியாக அலைய வைக்காமல், ஒரே இடத்தில் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களின் தேவைகளைக் கேட்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, கரூரில் தனியார் மண்டபம் ஒன்றைத் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது தவெக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் உரிய அனுமதிகளைக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட உள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டி இருப்பது, இந்த விவகாரத்தில் தவெகவின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.