கரூர் நெரிசல் வழக்கு- செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா செல்ல விஜய் திட்டம் வகுத்தார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தி முடித்தார். அடுத்தாக கரூர் மாவட்டத்திற்கு காலதாமதமாக சென்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் துடி துடித்து உயரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முதலில் தமிழக சிறப்பு குழு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அந்த வகையில் சிபிஐ போலீசார் கரூரில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகினர்.
இந்நிலையில் கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலோ அல்லது அவரது சார்பாகவோ யாரும் சம்மனை பெறவில்லை என்றும், மின்னஞ்சலில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.