×

பரப்புரைக்கு வரும் விஜய்க்கு கருப்புக்கொடி - ரஜினி ரசிகர்கள் முடிவு 

 

தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரைக்காக மேலூர் வரும்பொழுது  கருப்பு கொடி காட்டுவோம் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்காத தவெக தலைவர் விஜய் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்காக வரும்போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவோம் எனவும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ரஜினி ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று முன்தினம் ஆதவ் அர்ஜுனா இந்த கருத்திற்கு மன்னிப்பு கூறினார். இதனிடையே ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்காத அக்கட்சி தலைவர் விஜயை வன்மையாக கண்டிப்பதாகவும், அக் கட்சியில் முதலீடு செய்துள்ள ஆதவ் அர்ஜுனாவே மன்னிப்பு கேள் என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகள் மேலூர் பென்னி குயிக் பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மேலூர் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ராஜபாண்டியன், தங்கள் தலைவர் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தன்னை பார்க்க வந்து அதனால் ஏதாவது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே கட்சி தொடங்காமல் விலகிக் கொண்டதாகவும், அந்த நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் பல்வேறு கட்சிகளுக்கு முதலீடு செய்து லாபம் ஈட்ட முயற்சிக்கும் ஆதவ் அர்ஜுனா  தவறான கருத்துக்களை பேசியதை  கண்டிப்பதோடு இதுபோன்ற நிர்வாகிகளின் கருத்துக்களை தலைவர் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்த ரசிகர்கள், மேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் அவர்கள் வந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் எனவும் தெரிவித்தனர்.